Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பியின் விசாரணை: சபையில் அநுர தரப்பு விளக்கம்!

நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பியின் விசாரணை: சபையில் அநுர தரப்பு விளக்கம்!

0

சிறீதரன்(S. Shritharan) எம்.பியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சிறீதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று(21) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். 

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை செய்யப்பட்டதாக ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டுள்ளார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரன் எம்.பிக்கு ஏற்பட்ட அசௌகரியம்

சிறீதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இது அரசாங்கத்தின் முடிவும் அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்று பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.youtube.com/embed/9mAvGZ-EYRI

NO COMMENTS

Exit mobile version