Courtesy: Sivaa Mayuri
அமெரிக்காவின் ஓரேகொன்னில் ( Oregon) உள்ள ஒரு பண்ணையில் குறைந்தது ஒரு பன்றியிலாவது பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவில் பன்றிகளில் H5N1 வைரஸின் முதல் கண்டறிதல் என்று அமெரிக்க விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகம்
பறவைக் காய்ச்சல் முதன்முதலில் வணிக ரீதியான கோழிப்பண்ணை ஒன்றில் கண்டறியப்பட்டது என்று ஒரேகொன் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க, விவசாய அதிகாரிகள் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட 70 கோழிகளை கருணைக்கொலை செய்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வக தகவல்படி, குறித்த பண்ணையில் ஐந்து பன்றிகளில் ஒன்று வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸின் மரபணு
இதனையடுத்து பண்ணையில் உள்ள செம்மறி ஆடுகள் உட்பட மற்ற விலங்குகள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பன்றிப் பண்ணை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவல்படி, பண்ணையின் பாதிக்கப்பட்ட கோழிகளில் காணப்படும் H5N1 வைரஸின் மரபணு வரிசை முறையானது, மனிதர்களுக்கு அதிகமாகப் பரவக்கூடிய அடையாளம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.