Home இலங்கை சமூகம் பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

0

திருகோணமலையில் (Trincomalee) உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை பௌத்த பிக்கு ஒருவர் தடுத்து நிறுத்தியமை குறித்து  பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (04) குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மூவின ஒன்றிணைந்த விவசாய அமைப்புக்கள் திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (09) தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

உழவுப்பணியை தடுத்து நிறுத்தியவர் 

இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், “திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள வயல்
காணியில் பெரும்போக நெற்செய்கைக்காக ஆயத்த நடவடிக்கையாக உழவுப் பணியில்
பொதுமக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகைதந்த பெளத்த துறவி ஒருவரால்
குறித்த காணியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என்றும் அங்கு
சட்டவிரோத முறையில் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாக அவர் குழப்பம்
விழைவித்திருந்தார்.

சப்தநாக விகாரையின் விகாராதிபதி உழவுப்பணியை தடுத்து நிறுத்தியதாகவும், தொல்லியலுக்குரிய
பகுதியில் குறித்த பிக்கு உழவு செய்து வருவதாகவும் குச்சவெளி காவல் நிலையத்தில் புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்த பிக்குவினால் மேற்கொள்ளப்பட்டுவந்த
உழவுப்பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் இருவர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கள்
காணியில் விவசாயம் மேற்கொள்ள வரும்போது பூஜாபூமி எனக்கூறி விடுகின்றார்கள்
இல்லை.

1985ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வளத்தாமலைப் பகுதியில் உள்ள
காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில்
நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக திரியாய் கிராமத்தில் இருந்து
இடம்பெயர்ந்திருந்தனர்.

2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட
நிலையிலும் தங்கள் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு
திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு
அரிசிமலை விகாரை விகாராதிபதியின் பெயரில் குச்சவெளி கமநல சேவைகள்
திணைக்களத்தின்கீழ் 82 ஏக்கர் காணிகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு
சட்டமா?“ என கேள்வி எழுப்பினர்.

NO COMMENTS

Exit mobile version