Home இலங்கை அரசியல் கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து தமிழரசுக் கட்சி அதிருப்தி

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து தமிழரசுக் கட்சி அதிருப்தி

0

வரவு – செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள்
எதுவும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

நேற்று (12.03.2025) மாலை
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்திலே நாங்கள் நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்திலே பல விடயங்களை
நாங்கள் முன்வைத்திருந்தோம். 

குறிப்பாக கித்தூள் றூகம் குளங்களின் இணைப்பு
முந்தனையாறு செயற்றிட்டத்தினை மிக விரைவாக முன்னெடுப்பதற்காக நாங்கள் இந்த
வரவு செலவுத் திட்டத்திலேயே நிதி ஒதுக்கிடும்படி பலமுறை கூறியிருந்தோம்.

 வரவு – செலவுத் திட்டம் 

அதனோடு இணைந்து மிகப் பெரிய அளவிலான நிலப்பரப்பை இணைக்கின்ற பாலத்தின்
அபிவிருத்தி மற்றும் படுவான்கரைக்கும் எழுவாங்கரைக்கும் இடையிலான பாலங்களின்
அபிவிருத்தி புனர்நிர்மாணம், உட்கட்டமைப்பு போன்ற பல செயற்திட்டங்களை நாங்கள்
அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம்.

ஆனால் அவற்றுக்கான எந்த உறுதிப்பாடுகளும்,
நிதி ஒதுக்கீடுகளும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அரசியல் தீர்வு தொடர்பாகத்தான் இந்த அரசாங்கம் பாரிய இழுத்தடிப்புகளை செய்து
கொண்டிருக்கின்றது என்று இருந்தாலும் கூட அதற்கு அப்பால் பொருளாதார
விடயத்திலும் நிதி அதிகாரங்கள் விடயத்திலும் கூட பாரியளவு அல்லது வடகிழக்கு
பிரதேசங்களில் பாரியளவு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு
உண்மையாகவே இருப்பதாக தெரியவில்லை.

தமிழர்களின் ஆதரவு 

30 வருடங்களுக்குப் முன்பு அந்த காலங்களிலே அபிவிருத்தி செய்யப்படாத
வடகிழக்கு பிரதேசம் பின்பு யுத்தத்துக்கு பின்னரும்கூட பாரியளவு ஓரம்
கட்டப்பட்டிருந்தன.

புதிய அரசாங்கம் வந்த பின்னர் அவைகள் அனைத்தும் மாறும்
என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் கூட சில இடங்களில் அவர்களுக்கு ஆதரவுகளை
வழங்கியிருந்தார்கள்.

இந்நிலையிலும், அதே பாராமுகமும், ஒதுக்கப்படுகின்ற நிலையும், சூழலும்தான்
இன்னும் வடகிழக்கிலே இருந்து கொண்டிருக்கின்றன.

முக்கியமாக எமது நிலம்
தொடர்பான பிரச்சினைகள், நிலாக்கிரமிப்பு, மத்திய அரசுக்கு கீழ் இருக்கின்ற
திணைக்களங்கள் திணைக்கலங்களால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், ஒடுக்கு
முறைகள், என்பன தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்னும்
எங்களுடைய மேய்ச்சல்தரை தொடர்பான பிரச்சினை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு
எட்டப்பட்டவில்லை இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் குழு கூட்டங்களிலும்
நாங்கள் பலமுறை எடுத்தியம்பிருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version