புத்தளம் (Puttalam) – மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வர்த்தகர் பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என வென்னப்புவ காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அவரது நண்பர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வர்த்தகரின் உடல் மீட்பு
மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன் ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
