புதிய இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) உடைந்து விழுந்த உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.04.2025) கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”கல்முனை பிரதான வீதியில் இன்று (02) இடம்பெற்ற கார் விபத்தில் உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளது.
விபத்துச் சம்பவம்
இந்நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள்
தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை மோட்டார்
சைக்கிளில் பயணித்த மகனும் தந்தையும் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில்
சிக்குண்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற தந்தை சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த மகன்
காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே அதேஇடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள்
அறுந்திருந்தாலும் மின்சாரம் பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்பது
தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மின்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரணமாகவே மீண்டும் அதே இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) வேக கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.04.2025) கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று
கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த
சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
