Home இலங்கை சமூகம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் விசனம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் விசனம்

0

Courtesy: uky(ஊகி)

பாரிய குற்ற தன்மையற்ற ஒரு செயற்பாடு தொடர்பான முறைப்பாட்டுக்கு உடனடி விசாரணை அழைப்பு விடும் பொலிஸார் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையில் உள்ள இராமநாதன் அர்ச்சுனா மீதான முறைப்பாடொன்றின் பிரகாரம் அவரை நேற்று (07.07.2024) இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலமான அறிவுறுத்தலை பொலிஸார் வழங்கியிருந்தனர்.

அவ்வாறு, வர தவறும் போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ள இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் சட்டப்பிரிவுகளையும் அந்த எழுத்து மூலமான அறிவுறுத்தல் ஆவணத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

காரணம்

இந்த அணுகுமுறையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றமை இயல்பானது என்றால் நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்து சென்றிருக்க வேண்டும். எனினும் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் நடந்தவாறே இருக்கின்றன.

குறிப்பாக வடக்கில் ஒரு முறைப்பாடு கிடைத்ததும் அதற்கு இரவுவேளை என்றும் பாராது உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க முயற்சித்திருப்பது பாராட்டத்தக்கது.

ஆயினும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீதான முறைப்பாட்டுக்கு இவ்வாறு நடந்து கொள்வது பொலிஸார் பக்கச்சார்பற்று இயங்குவதாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முறைகேடுகள் நடந்ததாக வலியுறுத்தப்பட்டு வருவதோடு பொதுமக்களும் வைத்திய அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் அதனை வரவேற்று அவருக்கு ஆதரவளித்து வரும் ஒரு சூழலில் அந்த வைத்திய அதிகாரிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் இவ்வளவு விரைவு காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

பல முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு கால தாமதமாவதோடு இலங்கை நீதிமன்றங்களில் வழக்குகள் நீண்ட காலதாமதங்களை சந்திக்கின்றதும் நடைமுறையாக இருக்கின்றதனையும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

வழமையான செயற்பாடு 

வழக்கு தாக்கல் செய்யப்படாது நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், வைத்திய அதிகாரிக்கு எதிரான முறைப்பாட்டுக்கு மட்டும் அவர் இவ்வளவு விரைவாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட வரை முறையை மீறும் யாரொருவருக்கும் எதிராக செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் இது போல் விரைவாக செயற்படுவார்களானால் நாட்டில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும். 

ஒரு குறித்த நபர் மீது முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்படும் போது அது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக முறைப்பாட்டில் குறிக்கப்பட்ட நபருக்கு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படும்.

அவ்வாறு அழைக்கப்பட்டவர் பொலிஸ் நிலையம் வருவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். ஒரு இரவுப் பொழுதில் முறைப்பாடு கிடைக்கும் போது விசாரணைகள் அடுத்த நாளின் பகல் பொழுதில் தான் நடைபெறும். இந்த நடைமுறை சாதாரண பொதுமக்கள் தொடர்பில் இருந்து வரும் வழமை.

அரச உயரதிகாரி ஒருவர் தான் பொறுப்பேற்ற ஆதார வைத்தியசாலையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றார்.
தற்போதுள்ள ஒழுங்கமைப்புக்களில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி அவற்றை சீரமைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.

நிர்வாகச் செயற்பாட்டை இலகுவாக்கும் முறையில் செயற்பட முற்பட்ட வேளை, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொறுப்பதிகாரிக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டிய ஒரு சூழலில் பொறுப்பு வைத்திய அதிகாரி வந்து தன் பணிகளை ஆரம்பித்த ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து குழப்ப நிலையை தோற்றுவிக்கின்றனர்.

நடவடிக்கைகள்

சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் இருக்கின்றது.

சட்டங்களை இரு முறைகளில் நடைமுறைப்படுத்தி கொள்ள முடியும். ஒன்று முறைப்பாட்டாளரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அடிப்படையாக வைத்து சட்ட மீறல்களை கட்டுப்படுத்த முடியும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இன்றைய நிலை தொடர்பில் சட்டமுறைகளை மீறியவர்கள் செய்த முறைப்பாட்டை கொண்டே நடவடிக்கைகளை எடுக்க முற்படுவதாகவே ஊடகங்கள் மூலம் வெளியாகும் செய்திகள் ஏற்படுத்தும் புரிதலாக இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. பொது மக்களிடையே இத்தகைய புரிதலே தோற்றுவிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றையது தகவலறிதல் மூலம் சட்ட மீறல்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்தி சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது.

அப்படி நோக்கின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் பொலிஸார் ஏன் இதுவரை தகவல் சேகரித்து நடவடிக்கைகள் முன்னெடுத்து சட்ட மீறல்களை கட்டுப்படுத்த தவறியிருந்தனர் என்ற கேள்வியும் எழுகின்றது.

இங்கே சட்ட மீறல் என்பது நிர்வாக நெறிப்படுத்தல் சட்டங்களை மீறுவது தொடர்பிலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

விசேட ஏற்பாடு தேவை

இது தொடர்பில் தகவலறிந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் உண்மை நிலவரங்களை சென்று பார்த்து புதிதாக பொறுப்பேற்ற வைத்திய அதிகாரிக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்து சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு சூழலில் பொலிஸார் அதற்கு எதிராக செயற்படுவது போல் இருப்பதாக துறைசார் அறிஞர்களிடையே மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டனர். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சிறப்பான சேவையினை மக்களுக்கு பெற்றுக் கொடுப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைவதோடு முறைகேடுகளை உரிய காலங்களிலேயே இனம் கண்டு தடுப்பதற்காக விசேட ஏற்பாடுகளை இந்த அனுபவங்கள் அடிப்படையாக கொண்டு பொலிஸார் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும், மற்றொரு பொழுதில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பம் போல் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்து கொள்ள அந்த முயற்சி உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version