யாழ்ப்பாணம்- செம்மணிப் பகுதியில், மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில்
அகழ்வுப் பணிகள் நாளை (14) இடம்பெறவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில்
அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித
என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய, விடயத்தைப்
பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து பெப்ரவரி
மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதிவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
ஆய்வுப் பணிகள்
இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு
உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும்
தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு இடம்பெறவுள்ளன என்று தெரியவருகின்றது.
துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ தலைமையில் இந்த ஆய்வுப் பணிகள்
இடம்பெறவுள்ளன.
பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனிதச் சிதிலங்கள்
அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
