நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே
தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.
ஐங்கரநேசன் (P. Ayngaranesan) குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை
(12.10.2025) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு
குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடி
அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம்
அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல்
விசாரணைகளை முன்னெடுத்தது.
இவ்வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச
சாட்சியமளித்த போது தங்களால் 400 பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின்
புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய போதும் புதைகுழிகளைத் தொடர்ந்து
அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.
அதற்கு வேண்டிய போதுமான அழுத்தங்களை எமது
தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை.
இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள்
இப்போது, சிந்துபாத்தி
மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட
எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள்
கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கான
கதவுகளை முள்ளிவாய்க்கால் பேரவலம் திறந்து விட்டிருந்தது.
ஆனால், அவற்றைத்
தமிழ்த் தலைமைகள் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துக்குச் சர்வதேச அரங்கில்
பிணையெடுத்துக் கொடுக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டன.
தமிழின அழிப்பு
இப்போது, இனவழிப்பின்
சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து
இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு
நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர்.
அவர்களால் பயத்தின்
காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த
சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று
எழுந்து நிற்கின்றன.
காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது
எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
