சிக்குன்குனியா வைரஸ் அதிகரித்து வருவதால், இலங்கை செல்வோர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு, அமெரிக்கா அதன் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இலங்கைக்கான 2ஆம் நிலை பயண சுகாதார அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு முழுவதும், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் சிக்குன்குனியா காய்ச்சல் பரவல் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, மடகாஸ்கர் முதல் பிரான்சின் லா ரீயூனியன் துறை வரை, உள்ளூர் மற்றும் பயணம் தொடர்பான நோய் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2ஆம் நிலை எச்சரிக்கை
இந்நிலையில், சர்வதேச பயணிகளை எச்சரிக்கும் வகையில், இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் சிக்குன்குனியா காய்ச்சல் குறித்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ( CDC) சமீபத்தில் நிலை 2 – நடைமுறை மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கைகள், பயண சுகாதார அறிவிப்பை வெளியிட்டது.
இலங்கை, இந்தியாவின் தெற்கே அமைந்துள்ளது, சுமார் 21 மில்லியன் குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்தது.
இதற்கிடையில், 2025இல் இலங்கையில் சிக்குன்குன்யா வைரஸ் பரவலின் தாக்கம் குறித்து எச்சரித்துள்ள சர்வதேச நாடுகளின் அறிவிப்பு இலங்கையின் சுற்றுலாத் துறையை பாதிக்கும் அபாயம் இருப்பதாக கவலைகளை எழுப்புகின்றது.
அதேவேளை, அமெரிக்கா, சிக்குன்குனியா பரவல் உள்ள பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு, அமெரிக்க FDA-அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் தடுப்பூசி போட CDC பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
