இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாவதாக தேசிய
புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) ஆலோசகர் சமூக மருத்துவர் சூரஜ்
பெரேரா தெரிவித்தார்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இந்த புற்றுநோய்களில் பெரும்பாலானவற்றை
குணப்படுத்த முடியும் என்றும், பெற்றோர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறுவர் புற்றுநோயாளர்கள்
சிறுவர் ஒருவருக்கு அசாதாரண வீக்கம் அல்லது கட்டிகள், கண்ணின் கண்மணியில்
வெள்ளைத் தோற்றம் அல்லது வாந்தியுடன் காலை தலைவலி போன்ற அறிகுறிகளைக்
காட்டினால், உடனடியாக குழந்தை மருத்துவரை அணுகுவது பெற்றோரின் பொறுப்பு
என்றும் மருத்துவர் சூரஜ் பெரேரா அறிவுறுத்தினார்.
இந்த நோயாளர்களுக்கு அரசாங்கம் இலவச சிகிச்சையை வழங்குகிறது என்றும், இது
மஹரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனையின் சிறுவர் புற்றுநோய் பிரிவில்
கிடைக்கிறது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பதிவாகும் சிறுவர் புற்றுநோய்களில் மிகவும் பொதுவான வகைகள் இரத்த
புற்றுநோய் (லுகேமியா), நிணநீர் முனை புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும்
கண் புற்றுநோய் எனவும் அவர் மேலும் கூறினார்.
