Home இலங்கை அரசியல் வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள் : கனக ஹேரத் சுட்டிக்காட்டு

வேலைநிறுத்தங்களால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள் : கனக ஹேரத் சுட்டிக்காட்டு

0

நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

2022 ஆம் ஆண்டிலிருந்து, நமது அமைச்சினால் பாரிய அளவில் பல்வேறு கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட்டன.

டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம்

நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில சட்டமூலங்களை முன்வைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலக வங்கியின் ஆதரவுடன், 2020-2030 டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் வெளியிடப்பட்டது. தற்போதைய 03 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.

இன்று (09) நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்த எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுகர்வோரைப் பாதுகாப்பதுடன் தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை நியாயமான போட்டியாக மாற்றுவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

முன்பு, இந்த சட்டம் தொலைத்தொடர்பு கட்டமைப்பு அனுமதிப்பத்திரத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருத்தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறிமுறையும் மாற்றம் அடையும்.

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு 

மேலும், எதிர்காலத்தில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வசதிகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடல்வழி கேபிள் சேவைக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

இந்த ஆண்டு தொழில்நுட்ப மேம்பாட்டுச் சட்டத்தை முன்வைக்கவும் எதிர்பார்க்கின்றோம்.

மேலும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆணைக் குழுவை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு செய்வதன் மூலம், நாட்டின் அனைத்து அபிவிருத்தி மற்றும் புத்தாக்கங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். ஆராய்ச்சி, வணிகமயமாக்கப்படுவதுடன் பரிநதுரைகளை வழங்குவதும் இதன் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் தற்போதைய தொழில்சார் நடவடிக்கைகளின்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு கோரப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு வருடத்திற்கு சுமார் 280 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த செலவுகளை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதை எதிர்க்கட்சி தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், தேர்தல் நெருங்கும் வேளையில் அசாதாரண வகையில் போராட்டங்களை முன்னெடுத்தமையினால், பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இறுதியில் சாதாரண பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக இவ்வருடம் 11 பில்லியன் ரூபா வழங்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் மூலம் மக்களின் நிவாரண வாழ்வாதாரத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றனரா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version