Home இலங்கை சமூகம் முள்ளியவளையில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

முள்ளியவளையில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா

0

Courtesy: uky(ஊகி)

முள்ளியவளையில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு வழங்கியுள்ளனர்.

முள்ளியவளை சமுர்த்தி வங்கி சங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவினையே இராணுவத்தினர் புனரமைப்புச் செய்துள்ளனர்.

சிறுவர்களிடையே விளையாட்டுத் திறனை வளர்த்தெடுத்து அவர்களது செயற்றிறனை வினைத் திறனாக்குவதற்குவதற்கு சிறுவர் பூங்காக்கள் உதவி வருகின்றன.

சிறுவர் பூங்காக்களை பயன்படுத்துவதால் சிறார்களின் மனநிலை ஆரோக்கியமாகப் பேணப்படுவதோடு அவர்களது உடல் வளர்ச்சியும் சீராக பேணப்படும் என முன்பள்ளி ஆசிரியர்கள் சிலர் சிறுவர் பூங்காக்களின் பயன்கள் பற்றி தெரிவித்துள்ளனர்.

பூங்காவின் அமைவிடம்

முள்ளியவளையில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் வீதிக்கு இடது பக்கமாக இந்த சிறுவர் பூங்கா அமைந்துள்ளது.சமூர்த்தி வங்கிக்கும் பால் சந்தைப்படுத்தல் நிலையத்திற்கும் இடையில் இந்த பூங்காவின் நுழைவாயில் அமைந்துள்ளது.

பூங்காவின் பின்புறம் இராணுவ முகாமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
துயிலுமில்லத்திற்கு அருகில் இருப்பதாக இந்த பூங்கவின் அமைவிடத்தினை குறிப்பிடும் மக்களை முள்ளியவளையில் சந்திக்க முடிந்திருந்தது.

பூங்காவின் உட்புறத்தில் மரங்கள் வளர்ந்து நல்ல நிழல் இருப்பதுடன் பூங்காவின் உட்பகுதி தூய்மையாகவும் அமைதியாகவும் இருப்பதையும் அவதானித்து உணர முடிகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

புனரமைப்பு

பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாது பற்றைக்காடுகளாக நாளடைவில் மாற்றம் பெற்றுப் போகும் வழக்கத்தினை முல்லைத்தீவின் பல இடங்களிலும் உள்ள சிறுவர் பூங்காக்களில் காண முடிகின்றது.

சிறுவர்கள் தொடர்ந்து ஒரு கிரமமாக விளையாடும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்படும் அளவுக்கு அவை பராமரிக்கப்படுவதில்லை.

அந்த வகையில் தான் முள்ளியவளை சிறுவர் பூங்காவின் நிலையும் இருந்தது.அமைக்கப்பட்ட நாள் முதல் அது பயன்பாட்டில் இருந்தது மிகக்குறைந்த நாட்களே என அப்பகுதி வாழ் மக்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இந்த பூங்காவினை இலங்கை இராணுவத்தினர் சுத்தம் செய்து அதன் கட்டுமானங்களை திருத்தி புதுப்பித்து சிறுவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.

தற்போது பூங்கா கவர்ச்சிகரமான சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருக்கின்ற போதும் சிறுவர்கள் யாரும் அதனை அதிகம் பயன்படுத்துவதாக அவதானிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவித்தல் பலகை 

பூங்காவின் உள் நுழைவு பாதைக்கருகில் “சிறுவர் பூங்கா இலங்கை இராணுவத்தல் புனரமைப்பு செய்யப்பட்டது” என அறிவித்தல் பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அந்த பலகையில் “இராணுவத்தல்” என குறிக்கப்பட்டிருத்தலில் “இராணுவத்தால்” என அமைந்திருக்க வேண்டும்.

சிறுவர் பூங்காக்களை இராணுவம் புனரமைப்புச் செய்திருந்தாலும் பொது மக்கள் பயன்பாட்டுக்கென வழங்கப்பட்ட பின்னர் அது பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட வேண்டும்.அல்லது அதற்கென உருவாக்கப்படும் பொது அமைப்புக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

யாரொருவரால் அது தொடர்ந்து பராமரிக்கப்படப் போகின்றதோ அவர்கள் எழுத்துத் தவறினை கவனத்தில் எடுத்து திருத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கலாம் என்பது தமிழார்வலர் ஒருவரின் ஆதங்கமாக இருக்கின்றது.

தலையீடுகளைத் தவிர்க்கலாம்

வடக்கு கிழக்கில் இராணுவத் தலையீடுகளை தடுக்கும் நோக்கில் போராடி வரும் மக்களிடையே இராணுவத்தினர் மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.அந்த சேவைகளை பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய போக்கு இராணுவத் தலையீடுகளை தடுக்க நிகழ்த்தப்படும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் என எழுத்தாளர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிடுகின்றார்.

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன் முயற்சிகளை சிவில் அமைப்புக்கள் ஊடாக முன்னெடுக்கப்படலாம்.

இராணுவ உதவி

இராணுவத்தினரால் முள்ளியவளை சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டது போல் அண்மையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையும் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது என்பது நோக்கத்தக்கது.

இது போல் இராணுவத்தினரால் சிரமதானங்களும் மக்கள் நலன் சார்ந்த உதவிகளும் மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஒரு தொகுதி மரங்களை நடுகை செய்தது மற்றும் ஆலயத்தின் திருவிழாக்களின் பின்னர் ஆலய வளாகத்தினை சுத்தம் செய்வதிலும் கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் தலைமைகள் ஏன் கண்டும் காணாது இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தால் இராணுவத்தினர் செய்வதற்கான தேவை இருக்காதே என சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் தேவைகளை தமிழ் மக்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலை உருவாக்கப்படும் போது இத்தகைய இராணுவத் தலையீடுகள் இருக்கப்போவதில்லை.

ஒன்றுக்கு இராணுவம் வேண்டாம் என்பதும் மற்றொன்றில் இராணுவ உதவியை நாடுவதும் நேர்த்தியான சமூகப் போக்காக இருக்கப்போவதில்லை என ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் இது தொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version