இலங்கைக்கும்(sri lanka) சீனாவுக்கும்(china) இடையில் நிலவும் நட்புறவு மிகவும் வலுவான நட்புறவு என்றும், சீன அரசாங்கத்தின் ஆதரவு சுகாதாரத் துறைக்கு மாத்திரமன்றி இந்நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் வழங்கப்படுவதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளதுடன். எதிர்காலத்தில் அந்த ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷான்ஹோங்(qi-zhenhong) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் – சீன தூதுவர் முதல் சந்திப்பு
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் சீன தூதுவருடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும்.மேலும் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான வேலைத்திட்டம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.
சீன அரசின் உதவிக்கு பாராட்டு
இலங்கை எவ்வாறான சவால்களை எதிர்கொண்டாலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும், கொவிட் தொற்றுநோய்களின் போது கிடைத்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு கட்டிடம், பொலன்னறுவை சீன-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை போன்ற உதவிகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும் அந் நாட்டு மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வருகிறது மருத்துவ கப்பல்
சீன மக்கள் கடற்படையின் (அமைதி கப்பல்) மருத்துவமனை கப்பல் இம்மாதம் 21 முதல் 28 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாகவும், விசேட வைத்தியர்கள் தலைமையிலான சுகாதார குழு இந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு விரிவான மருத்துவ சிகிச்சைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் சீன தூதுவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறையின் எதிர்கால முன்னேற்றத்துக்கான முன்மொழிவுகளையும் சீனத் தூதுவர் அமைச்சரிடம் முன்வைத்தார்.