Home இலங்கை குற்றம் நாமல் குமாரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை

நாமல் குமாரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை

0

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக சமூக ஆர்வலர் நாமல் குமார, அண்மையில் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரிக்குமாறு கொழும்பு மறைமாவட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகங்களிடம் நேற்று(29.12.2024) இது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட மறைமாவட்டத்தின் ஊடக இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கு செயற்பாட்டாளர் நாமல் குமார ஒரு தூண்டுதலாக இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் அவர் மற்றொரு காட்சியைத் திட்டமிடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

2024 டிசம்பர் 24 அன்று, செயற்பாட்டாளர் நாமல் குமார ஜனாதிபதி செயலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்துள்ளார். கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குரல் பதிவு ஒன்று ஊடகங்களில் பரப்பப்படுவதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி

இந்தநிலையில், முழு கத்தோலிக்க சமூகத்தின் சார்பாகவும், செயற்பாட்டாளர் நாமல் குமார, கர்தினாலுக்கு எதிராக மேற்கொண்ட இந்த முறைப்பாட்டை கண்டிப்பதாக அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த குரல் பதிவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையது என்று நம்பப்படுகிறது.

எனவே, இது நாமல் குமாரவின் நோக்கத்தினாலோ அல்லது மூன்றாம் தரப்பினரின் வேண்டுகோளினாலோ கர்தினாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று தாம் கருதுவதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வந்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, ஏதோ ஒரு அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் திடீரென சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜபக்ச குடும்பத்தின் செயல்கள்

இதுவே உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை கொடிய குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைச் செயல்படுத்துவதற்காகவே நாலக சில்வா தடுத்து வைக்கப்பட்டார் என்பது தெளிவாகிறது.

அத்துடன் இந்த பணியின் முக்கிய தலைவராக நாமல் குமாரவே செயற்பட்டுள்ளார் என்று அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாமல் குமார வேறொரு சம்பவத்தைத் திட்டமிட யாரையாவது தூண்டுகிறார் என்பது தெளிவாகிறது என்றும், இவை ராஜபக்ச குடும்பத்தின் சில செயல்களாக தாம் கருதுவதாகவும் அருட்தந்தை கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

எனவே, நாமல் குமார எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுகள் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்துள்ளதால், விசாரணையைத் தொடங்கி நீதியை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்வதாக அருட்தந்தை ஜூட் கிரிசாந்த கோரிக்கை விடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version