கொள்கலன்களை ஏற்றிச் சென்ற முன்னூறுக்கும் மேற்பட்ட கொள்கலன் லொறிகள், கொழும்பு துறைமுக வளாகத்தில் பல நாட்களாக தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகைக் காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நாட்டிற்கு கிடைத்த நிவாரண உதவிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (15.10.2025) தெரிவித்துள்ளார்.
தேங்கிக் கிடக்கும் கொள்கலன்கள்
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் தற்போது அகற்றப்பட்டு வந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலானவை இன்னும் வளாகத்தில் தேங்கி நிற்கின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவது முறையான நடைமுறையின்படி மேற்கொள்ளப்படாவிட்டால், வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான கொள்கலன் லொறிகள் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்படலாம்.
இந்த சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தனது சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவித்தாலும், முறையான தீர்வுகள் அல்லது தற்காலிக தீர்வுகள் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க பொறுப்பான அமைச்சர் உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்துகிறது.
