Home இலங்கை அரசியல் பொதுவேட்பாளர் விவகாரம்: முகவர்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் கூத்து

பொதுவேட்பாளர் விவகாரம்: முகவர்களுக்கு இடையில் நடக்கும் அரசியல் கூத்து

0

பொதுவாகவே ‘அரசியல் கூத்துக்கள்’ அரசியல்வாதிகளுக்கு இடையில்தான் நடப்பது வழக்கம்.

‘பொது வேட்பாளர் என்கின்ற தலைப்பில் வடக்கு கிழக்கில் தற்பொழுது அரங்கேறிக்கொண்டிருக்கின்ற கூத்துக்கள் என்பது உண்மையிலேயே முகவர்களுக்கு இடையில் நடக்கின்ற கூத்துக்கள்’ என்று சலித்துக்கொண்டார் யாழில் உள்ள ஒரு முக்கியமான தமிழ் ஆர்வலர்.

யார் அந்த முகவர்கள்.. யார் யாருக்கெல்லாம் அவர்கள் முகவர்கள் என்பதை நீங்கள்தான் ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும்.

‘பொது வேட்பாளர்’ என்ற அரங்குகளில் நின்று கூத்தாடிக்கொண்டிருக்கின்ற சில பிரமுகர்களின் கடந்த காலங்கள் பற்றித் தேடிப்பார்க்கின்போது, பல அருமையான காட்சிகள் உங்களுக்கு ஞாகத்துக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இலங்கையில் இருந்து கோட்பாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்ட நிலையில், சிறிலங்காவின் அடுத்த அரசதலைவராக யாரை ஆதரிப்பது என்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் கொழும்பில்(Colombo) நடைபெற்றது.

19.07.2022 அன்று கொழும்பிலுள்ள சம்பந்தன் வீட்டில் நடைபெற்ற அந்தக் கூடத்தில், ரணில் விக்ரமசிங்கவையா அல்லது டலஸ் அழகப்பெருமவையா ஆதரிப்பது என்கின்றதான வாதப்பிரதிவாதங்கள் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

டலசைத்தான் ஆதரிக்கவேண்டும் என்று ‘தமிழரசுக் கட்சியின் முந்திரிக்கொட்டை’ என்று விமர்சிக்கப்படுகின்ற ஒரு பிரமுகர் குரலை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ‘இந்தியத் தூதராலயம் அதனைத்தான் விரும்புகின்றது’ என்று கூறியதுடன், உடனடியாகவே இலங்கையிலுள்ள இந்தியத் தூதராலய அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி இணைப்பை எடுத்து, டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கும்படி அந்த அதிகாரி கேட்டுக்கொண்டதை தொலைபேசி ஒலிபெருக்கியில் போட்டுக்காண்பித்திருந்தார்.

தமிழ் மக்களுடைய நலன்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அங்கு அந்த முந்திரிக்கொட்டை பிரமுகரால் பிரஸ்தாபிக்கப்படவில்லை. வேறு ஒரு நாட்டின் விருப்பம்தான் அங்கு முன்நிலைப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட அந்த ‘முந்திரிக்கொட்டை பிரமுகர்தான்’ தற்பொழுது பொதுவேட்பாளர் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்று குதி குதியென்று குதித்துக்கொண்டிருக்கின்றார்.

மறுபக்கம் பொதுவேட்பாளர் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பிரமுகர்களை எடுத்துப்பார்த்தாலும், அவர்களில் சிலரைப் பற்றிய கடுமையான சந்தேகங்களும் தமிழ் மக்களால் எழுப்பப்படுகின்றன.

பொதுவேட்பாளர் பற்றி ‘கொடுத்த காசுக்கு மேலாகக்’ கூவிக்கொண்டிருப்பவர்களில் பலர், தூதரகம் ஒன்றுக்கு பிசுகோத்துக்கும், போண்டா பஜ்ஜி சாப்பிடுவதற்காகவும் வாராவாரம் ஏறி இறங்குகின்ற நபர்கள்தானாம்.

அந்த தூதரகம் தலையாட்டாமல் சொந்த மனைவியிடம் கூடப் பேசமாட்டார்களாம்.

தமிழ் மக்களின் அரசியல் குறித்து இவர்கள் மேடைபோட்டெல்லாம் பேசுகின்றார்கள் என்றால், அது நிச்சயமாக இவர்களது குரலாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று கூறுகின்றார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்துவதற்கும், தமிழ் மக்களுக்கு அறிவூட்டுவதற்கும் நிதியில்லை என்று கூறித்திரிகின்ற இந்தப் பிரமுகர்கள் இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்து நட்சத்திர விடுதிகளில் கூட்டம்போட்டுப்பேசுவது ஆச்சரியமளிக்கின்றது என்று திருவாளர் பொதுஜனம் விசனம் வெளியிடுகின்றது.

பொதுவேட்பாளர் அரங்குகளில் நின்று கூறத்தடும் உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

உங்கள் எஜமானர்களின் விரும்பம் என்ன என்று பார்க்காமல், நீங்கள் சார்ந்த மக்களின் விரும்பம் என்ன என்று முதலில் பாருங்கள்.

நீங்கள் சார்ந்த மக்களுக்கு எது நன்மை என்பதை கேளுங்கள்.

தூதரகங்களின் விருப்பங்களை மாத்திரம் நிறைவேற்றுகின்ற புரோக்கர் தொழிலை செய்வதற்கு உங்களைப் போன்ற புத்திஜீவிகள் தமிழ் இனத்துக்குத் தேவையில்லை.

பஜ்ஜிக்கும் சொஜ்ஜிக்கும் உங்கள் இனத்தின் நன்மைகளை அடகுவைக்காதீர்கள்.  

NO COMMENTS

Exit mobile version