முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் (Illankai Tamil Arasu Kachchi) வேட்பாளர்களை இறுதி பட்டியலை நியமனக்குழு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன்,சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன் மற்றும் தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு
இதன் பின் ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை அழைத்துள்ளார்.
ஆனால் அவர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.
இதன்போது, பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கமும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறீதரனை கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது வெளியேறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தியிருந்தனர்.
விலகும் உறுப்பினர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (k v thavarasa) தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.