வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன
அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தியின்
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரிதா அலட்சியமாக பதில் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட
நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.
பொய் வாக்குறுதிகள்
மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளைக்
அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.
குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக
விட்டு செல்கின்றனர். இதனால் மருதங்கேணி உள்ளக வீதிகள் பெரும்
சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.
கனரக வாகனங்கள் உள்வீதியால் பயணிக்க தடை காணப்படுகின்ற வேளையிலும் கனரக
வாகனங்களை உள்வீதி ஊடாக கொண்டு வந்து வீதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
உரிய முறையில் மருதங்கேணி பிரதேச மக்களால் நன்னீர் திட்ட அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை
ஏமாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நன்னீர் திட்ட அதிகாரிகள் ஏனைய
பகுதியில் தமது வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளை குறித்த இடத்தில்
அதிகளவான இளைஞர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது
நேரம் பதற்றம் நிலவியது.
இளைஞர்கள் குறித்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனடியாக வேலையை
நிறுத்துமாறு பணித்ததுடன்
நீங்கள் சேதப்படுத்திய வீதியை புனர்நிர்மாணம் செய்து தந்த பிறகு ஏனைய வேலைகளை
தொடருமாறு அப்பகுதி இளைஞர்களால் அறிவுறுத்தப்பட்டது.
தான்தோன்றித்தனமான செயல்
உடனடியாக குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின்
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், தாளையடி நன்னீர் திட்ட மக்கள்
தொடர்பாடல் அதிகாரியுமான பரிதா, மோட்டார் சைக்கிளை விட்டு கீழே
இறங்காமல் தான்தோன்றித்தனமாக பதில் அளித்ததால் இளைஞர்கள் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு மேல் அதிகாரியை அழைத்தனர்.
குறித்த இடத்திற்கு சென்றிருந்த மேலதிக அதிகாரி ஒருவர் இன்று காலை 9
மணிக்கு முன்பு உரிய பதிலை வழங்குவதாக கூறிவிட்டு தாம் மேற்கொண்ட ஏனைய
வேலைகளையும் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு சென்றிருந்து பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர்
வேலாயுதம் சசிகாந்த் குறித்த வீதியை பார்வையிட்டதுடன் குறித்த வீதி மிகப்
படுமோசமான முறையில் காணப்படுவதாக தெரிவித்தார்.
பயணம் செய்ய முடியாத அளவு அந்த வீதியை சேதப்படுத்தி விட்டு அலட்சியப்
போக்குடன் அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் அவர் கண்டித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு வாசல் படி ஏறி
வந்த குறித்த தேசிய மக்கள் சக்தி அதிகாரி தற்போது வெற்றி பெற்ற பிறகு மக்களை
மதிக்காமல் மக்களது கருத்துக்களை இறங்கிவந்து கேட்டு அறியாமல் மோட்டார்
சைக்கிளில் இருந்தபடியே தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக மக்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.
