இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மத்திய குழுவை உடனடியாகக் கூட்டுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கட்சியின் செயலாளருக்கு நேற்று (04) அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின்
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு இன்னும் சட்டபூர்மாக கட்சியின் யாப்புக்கு
முரணில்லாத வகையில் நியமிக்கப்படாத போதும் பலர் தங்களை இப்போதே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றத்
தேர்தலுக்கான வேட்பாளர்களாகப் பிரசாரங்களை முன்னெடுப்பதை சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கின்றது.
சுமந்திரனின் கூற்று
எனவே பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய குழுவைக் கூட்டி உரிய முறைப்படி
தீர்மானங்களை எடுப்பதே முறையானது. தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர்கள் தேர்வுக்குழுவில்
உள்வாங்கப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு முரணானது. தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருந்து ஒருவர் தன்னைத்
தானே தேர்வு செய்வது எப்படி நியாயமாகும்.
கடந்த 28.09.2024 அன்று காலையில் இருந்து மாலை இடம்பெற்ற மத்தியகுழுக் கூட்டத்தின் இறுதித் தருவாயில்
தேர்வுக் குழு என்ற அடிப்படையில் ஒரு பெயர்ப் பட்டியல் வாசிக்கப்பட்டது. சிலர் தமது கருத்துக்களைத்
தெரிவித்தனர் ஆயினும் அவை பதிவு செய்யப்படவில்லை.
ஆனாலும் சுமந்திரனின்
“இப்போது நேரம் சென்று விட்டது, இப்போதைக்கு இது இருக்கட்டும், தேர்வுக் குழு விவகாரத்தைப் பின்னர்
பார்ப்போம்” என்ற கூற்றுக்கு அமைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாமலேயே தேர்வுக்குழு விவகாரம்
பிற்போடப்பட்டது.
கட்சியின் யாப்புக்கு அமைய ஒரு தீர்மானம் எடுப்பதாயின் அவ்விடயதானம் ஒருவரால் முன்மொழியப்பட்டு
மற்றுமொரு அங்கத்தவரால் வழிமொழியப்படல் வேண்டும். ஆனால் தேர்வுக்குழு விவகாரம்
முன்மொழியப்படவுமில்லை வழிமொழியப்படவுமில்லை.
எனவே இதற்கு மேலும் தேர்வுக்கு குழு இதுதான் என்று
தனிப்பட்டரீதியில் பிரகடனப்படுத்துவது கட்சியின் யாப்புக்கு முரணானதாகும். சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியே தேர்வுக்குழு நியமிக்கப்படல் வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல்
ஆனால்
வாசிக்கப்பட்ட பதினொரு பெயர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த 04 பேர் இருந்தார்கள். ஆயினும் கொழும்பைப்
பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெயரேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
தேசியப் பட்டியல் குறித்து இங்கு இறுதித் தீர்மானம் எட்டப்படல் வேண்டும். ஏனெனில் முன்னர்
தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் பெற்றவர்களோ தேர்தலில் தோல்வியுற்றவர்களோ தேசியப்பட்டியல் ஊடாக
மீள நியமனம் பெறக் கூடாது.
அத்துடன் புதிதாக திடீரென்று யாரையும் கொண்டு வந்து தேசியப்பட்டியலுக்குள்
தன்னிச்சையாக உள் நுழைப்பதும் பொருத்தமானதல்ல
“கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றவர்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட
சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது” என்பது சரியான விடயமல்ல.
ஏனெனில் எம்.சிவசிதம்பரம் தேர்தலில்
போட்டியிட்டு தோல்வியடைந்து பின்னர் அடுத்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு
பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் தலைமைத்துவ
இடைவெளியை அலங்கரித்தார்.
இது யாராலும் மறுக்க முடியாத வரலாறு. தோல்வியடைதல் என்பது இங்கு
கருத்தில் கொள்ளப்படுவது பொருத்தமானதல்ல.
ஆகவே பொறுப்புவாய்ந்த தமிழர்களின் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உடனடியாக தனது
மத்திய குழுவைக் கூட்டி உரிய முறைப்படி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று தயவாய் பொறுப்புடன்
வேண்டிக் கொள்கின்றேன்.“ என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.