முன்னைய காலகட்டங்கள் போன்றே இந்த அரசாங்கத்தின் கீழும் ஊழல், மோசடிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வ ஜன அதிகாரம் கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று (29) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்-மோசடிகள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்கள் போன்றே இந்த அரசாங்கத்திலும் ஊழல், மோசடிகள் நடைபெறுகின்றன.
கடந்த காலங்களில் எந்தளவுக்கு ஊழல், மோசடிகள் நடைபெற்றனவோ அவற்றில் கொஞ்சமும் குறைவின்றி இப்போதும் நடைபெறுகின்றது.
கடந்த காலங்களில் ஊழல், மோசடியில் கிடைத்த வருமானம் தனிநபர்களின் கைகளுக்குச்சென்றது.
ஆனால் இந்த அரசாங்கத்தில் அவை எல்லாம் கட்சி நிதிக்குச் செல்கின்றது.அவ்வளவுதான் வித்தியாசம்.
எட்டு லட்சம் ரூபாய் கொடுப்பனவு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனைத்து கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக கிடைக்கும் எட்டு லட்சம் ரூபாய் கொடுப்பனவையும் அவர்களின் கட்சி நிதிக்கே பெற்றுக் கொள்கின்றார்கள்.
அதில் இருந்து வெறும் எண்பதாயிரம் ரூபா மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியால் வழங்கப்படுகின்றது.
அதன் மூலம் வாழ்க்கைச் செலவை சமாளித்துக் கொள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடுமாறு கட்சியால் தூண்டப்படுகின்றார்கள் என்றும் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
