யாழில் (Jaffna) ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த குறித்த சந்தேகநபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக
வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பணத்தினை
கொடுத்துள்ளார்.
விசேட குற்றத்தடுப்பு காவல்துறை
இந்நிலையில் அந்த பணத்தினை வாங்கிய நபர் அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல்,
அந்த பணத்தினை திருப்பியும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தார்.
அந்தவகையில் மேற்படி குற்றத்தடுப்பு
பிரிவின் பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது
செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
