Home இலங்கை சமூகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கான தடையை நிராகரித்த நீதிமன்றம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கான தடையை நிராகரித்த நீதிமன்றம்

0

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தபோதே மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்று அழைப்பாணை

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி
இளங்கோதைக்கும் அவரோடு இணைந்தவர்களுக்கு எதிராகவும் இந்த
தடையுத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றை நாடிய நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு நியாயங்களை முன்வைக்குமாறு யாழ்
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி இளங்கோதைக்கு
யாழ் நீதவான் நீதிமன்று அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இதற்கு அமைவாக நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் யாழ் மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி உள்ளிட்டவர்கள் முன்னிலையாகி
தமது போராட்டத்தின் நியாயப்பாட்டையும் தமக்குள்ள உரிமையையும் மன்றின்
கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நீதவான் நீதிமன்று தனது கட்டளையில் பொலிஸாரால் செய்யப்பட்ட
தடையுத்தரவு கோரிய விண்ணப்பத்தை சாதகமாக பரிசீலிக்க முடியாது என்றும் 1981ஆம்
ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம் பிரிவு 69 A இன் கீழாக சமூக
நோக்கத்திலான பேரணிகளை தடை செய்ய முடியாது என்றும் அதற்க்கு ஜனாதிபதி
தேர்தல்கள் சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்படுள்ளது என்பதை
சுட்டிக்காட்டியதோடு பேரணியை தடை செய்யக்கோரிய பொலிஸாரின் விண்ணப்பத்தை
நிராகரித்திருந்தது.

மிக நீண்ட நேரமாக இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான
சட்டத்தரணிகள் மிகவும் சிறப்பான முறையில் தமது வாதங்களை முன்வைத்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் நீதிகோரிய பேரணிக்கு சட்ட
ரீதியிலான உரிமையை நீதிமன்றின் ஊடாக உறுதிப்படுத்தியிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version