மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் கிரேக்கம் பாரிய நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில் இலங்கையின் மத்திய வங்கி பெரும் தொகையொன்றை கிரேக்க மத்திய வங்கியின் பிணைமுறிகளில் முதலீடு செய்திருந்தது.
அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 1.8 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது. மத்தியின் வங்கியின் அன்றைய ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயத்தில் நேரடித்தலையீட்டை மேற்கொண்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத்தாக்கல்
அதனையடுத்து கடந்த நல்லாட்சிக் காலத்தில் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
எனினும் வழக்குத் தாக்கல் செய்துள்ள முறையில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகத் தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கப்ரால் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்த வாதங்களை அடுத்து கடந்த மே மாதம் 31ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.