நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வுக்கு இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களில் தொல்பொருள் துறையும் முக்கிய காரணமாக உள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பு
மேலும் தெரிவிக்கையில். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.
எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது.
அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் இதனை விடவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரபுஅடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, ஜாயா நகர், கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரியகுளம் முதலிய கிராமசேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டு பிடித்து வைத்துள்ளது.
இந்த செயலானது, நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும், இது நாட்டிற்கு பேரிழப்பு என்பதனையும், இந்த அவையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட..
இதற்கு மேலாக, இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது.
இது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன.
ஆகவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி தொல்பொருள் துறை,வனத்துறை வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை, புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அதன் வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.