மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (16.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் குரல் முதல்
முறையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறது. இதற்கு காரணம் பழைய தலைமைகளான
திகாம்பரமும் ஆறுமுகன் தொண்டமான் வழிவந்த ஜீவன் தொண்டமானும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பல முறை
ஏமாற்றி வந்துள்ளனர்.
ஏமாற்றப்பட்ட மக்கள்
திகாம்பரம், நல்லாட்சி காலத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா
பெற்றுத்தருவதாக அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலவாக்கலைக்கு
கூட்டிக்கொண்டு வந்து தெரிவித்தார். ஆனால் சம்பளம் பெற்றுத்தரப்படவில்லை.
பல
உயிர் தியாகங்களையும் போராட்டங்களையும் செய்துதான் காலம் கடந்து ஆயிரம் ரூபா
பெற்றுக்கொடுக்கப்பட்டது. அது சில தோட்டங்களில் முறையாக வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்ற பின் அவரை அதே
தலவாக்கலைக்கு ஜீவன் தொண்டமான் கூட்டி கொண்டு வந்து 1700 ரூபா தருவதாக
தெரிவித்தார். வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. ஆனால் சம்பளம்
பெற்றுக் கொடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.