Home முக்கியச் செய்திகள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை

0

புதிய இணைப்பு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402/23 இன்று 21.09.2024 இரவு 10.00 மணி தொடக்கம் 22.09.09.2018 காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே நேரத்தைச் செலவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டிற்குச் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து நபர்களும் தங்கள் விமான டிக்கெட் அல்லது ஆதார ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, அத்தியாவசிய சேவைகளை நடத்தும் நிறுவனங்களின் தொடர்புடைய ஊழியர்களுக்கு, அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது பொருத்தமான ஆவணம் பயன்படுத்தப்படலாம்.

மேலும் அந்த ஆவணம் மற்றும் தொடர்புடைய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை காவல்துறையில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இந்த காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறும் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என அனைத்து பொதுமக்களிடமும் இலங்கை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம்

பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

NO COMMENTS

Exit mobile version