இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய
நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு,
கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே
அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் சிங்கள கட்சிகள் போட்டி
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைக் குறிவைத்து விமர்சித்து
வருவதை நாம் அவதானித்துக் கொண்டுதான் வருகின்றோம்.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்
இடம்பெறுகின்றது.
இந்தத் தேர்தலில் தெற்கத்தேய சிங்கள ஏகாதிபத்திய கட்சிகள் வடக்கு, கிழக்கில்
போட்டி போடுகின்றன.
இவ்வாறான தெற்கத்தேய இனவாத சிங்களக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது
என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
இனவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும் தமிழர் தாயகத்தில் மக்கள்
வாக்களிக்கக் கூடாது என்றும் ஆரம்பம் முதலே கூறிவந்தவன் நான்.
அத்துடன் சிங்களத் தேசிய கட்சிகளை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ்த் தேசியக்
கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஆரம்பம் முதல் நான்
வலியுறுத்தி வந்துள்ளேன்.
அந்தவகையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் 58 உள்ளூராட்சி மன்றங்களில்
போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள்
வாக்களிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நாடாளுமன்றத் தேர்தல்களில் 1956 ஆம் ஆண்டு முதல்
தொடர்ந்து தக்க வைத்து வரும் ஒரேயொரு கட்சி என்ற வகையிலும் இறுதியாக இடம்பெற்ற
நாடாளுமன்றத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் பத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களில் எட்டுப் பேரைக் கொண்ட பெருமைக்குரிய ஒரேயொரு கட்சி என்ற
வகையிலும் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.
அறிவுள்ளவர்கள் உறுப்பினர்களாக வர வேண்டும்
உள்ளூராட்சி சபைகளில் அனுபவம் மற்றும் அந்தத் துறைசார்ந்த அறிவுள்ளவர்கள்
உறுப்பினர்களாக வர வேண்டும். அப்போதுதான் அந்தச் சபை வினைத்திறன் மிக்கதாக
அமையும்.
அவ்வாறான தகமையுள்ளவர்கள் உள்ள ஒரேயொரு கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே
உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தந்தக் குடியிருப்பாளர்களுடன் அதே ஊரில்
வாழ்ந்து அந்தப் பகுதி மக்களின் தேவைகளை நேரடியாக உணர்ந்தவர்களே உண்மையான
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள். அவ்வாறான உறுப்பினர்களே எமது இலங்கைத்
தமிழரசுக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர்.
மக்களின் நில உரிமை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.
மயிலிட்டி பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரை சட்டவிரோதமானது என
நாம் வெளிப்படையாகக் கூறுகின்றோம்.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இவ்வாறு சட்டவிரோத விகாரை என்று கூறுவார்களா?
சிங்கள இனவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக விளங்கும் இவர்களால்
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோத விகாரை எனக் கூற முடியாது.
எனவே, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய
நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு,
கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
