Home இலங்கை சமூகம் மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு

மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவாலயம் றீச்ஷாவில் திறந்து வைப்பு

0

இனத்தின் விடியலுக்காய் தம் வாழ்வை அர்ப்பணித்த ஈழத்தின் மறைந்த ஊடகவியலாளர்களை போற்றும் முகமாக றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நினைவாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகர் இனத்தின் காவலர் (Journalist – Defendor of Society) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவாலயத்தில் மறைந்த 16 ஊடகவியலாளர்களுக்கான நினைவுச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

குறித்த நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மூத்த ஊடகவியலாளர் துரைரத்தினம் மற்றும் மறைந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஆகியோரினால் இன்று (14.12.2025) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இனத்திற்கான தீர்வு

இதனைத் தொடர்ந்து மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றப்பட்டதுடன் அவர்களின் நினைவுச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐ.பி.சி தமிழ் மற்றும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையின்ட தலைவர் கந்தையா பாஸ்கரன், அபிவிருத்தியினால் அரசியல் உரிமையை வெல்லலாம் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இனத்திற்கான தீர்வு கிடைக்காத வரை அபிவிருத்தி அடைந்து பயனில்லை என தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிகழ்வில் உரையாற்றிய சந்தியா எக்னெலிகொட, “மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூருகின்ற ஒரு செயற்பாடு தென்னிலங்கையில் நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவ்வாறு நடக்காததனால் அதனை எண்ணி வெட்கப்படுவதுடன் வடக்கில் இவ்வாறு ஒரு செயற்பாடு நடந்ததை நினைத்து பெருமைப்படுகின்றேன்“ என தெரிவித்தார்.

இந்த நினைவாலய திறப்பு விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள், rமூக நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் பா.பிரியங்கன் 

NO COMMENTS

Exit mobile version