இலங்கையில் அண்மையில் பதிவான சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வர்த்தக தரப்பினருக்கான நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயத்திற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நிவாரணங்கள்
இலங்கை மத்திய வங்கியினால் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு, வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய நிவாரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கு அமைய வருமானம் அல்லது வணிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயனடைவர் என தெரியவருகிறது.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எழுத்து மூலமான, பாதிப்புகள் குறித்த விபரங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதியளவில் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான வலியுறுத்தல்
குறிப்பாக பாதிக்கப்பட்ட கடன் வாங்குபவர்களின் மூலதனம் மற்றும் அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடன் வசதி வாய்ப்புக்களுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு 3 முதல் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வட்டி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியினில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வட்டி விகிதத்தை விட அதிக வட்டியினை வசூலிக்க கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் எந்தவொரு கடன் மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய, கடன் பெறுபவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.
