Home இலங்கை அரசியல் ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் முக்கிய கலந்துரையாடல்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலை அமுதன் சேனாதிராஜா ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உயர்மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடல், வடமாகாணத்தில் விரிவான அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

கலந்துரையாடல்

இந்த சந்திப்பு, ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தின் போது யாழ்ப்பாணம் ஜெட் விங் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புதல்வருமான கலை அமுதன் சேனாதிராஜா, வடமாகாணத்தின் நீண்டகால அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளையும் வேலைத்திட்டங்களையும் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் வடக்கில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் நீண்ட கால சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் உடனடி சாதகமான தீர்வுகளை காண்பதற்கு, குறித்த பிரச்சினைகளை சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

பல தசாப்தகால மோதல்களுக்கு பின்னர் மீண்டுவரும் வடமாகாணத்தின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்ய இந்த வேலைத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வடமாகாண அபிவிருத்தி

வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார் என மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version