இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, தம்மிக்க பெரேரா இன்று (05) இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி
இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “பொதுஜன பெரமுனவே இலங்கையில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சி. 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையவே இல்லை. இதுவே எமது பிரச்சனை. இதனை அனைவராலும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை இதுவரை மக்களால் மேற்கொள்ள முடியாதுள்ளது.
அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தரப்பினர் இதுவரை பொருளாதார அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை முன்வைக்கவில்லை.
இறுதி தீர்மானம்
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் களமிறங்க நான் தயார்.
இதற்கான முன் ஆயத்த பணிகளை நான் தனிப்பட்ட ரீதியில் தற்போது மேற்கொண்டு வருகிறேன்.
எனினும், எனது கட்சியே அதிபர் வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும். கட்சியின் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.