Home இலங்கை கல்வி ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக புதிய முறைமை : கல்வி அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக புதிய முறைமை : கல்வி அமைச்சர் அறிவிப்பு

0

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இங்கு உரையாற்றிய பிரதமர், ”தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் கற்றல் முறைமை

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version