சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள்
இன்றையதினம் (10) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் இலங்கை அரசிடம் நீதி கோரியபோதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில்
தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து
வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது காலை பத்து முப்பது
மணி அளவில் இடம்பெற்றது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர்,
பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
செய்தி – தீபன்
கிளிநொச்சி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மற்றுமொரு கவனயீர்ப்பு
போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு
கவனயீர்ப்பு பேரணி காக்கா கடை சந்திவரை இடம்பெற்றது.
செய்தி – எரிமலை
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம்,
இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே
நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை
மேற்கொண்டனர்.
செய்தி – ஷான்
மன்னார்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இன்றைய தினம் (10) காலை
11 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான
நிறுவனம் (மெசிடோ) ஏற்பாட்டில் இளையோர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஊர்வலம்
இடம் பெற்றது.
இளையோர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் குரல் கொடுக்கும் முகமாக
குறித்த ஊர்வலம் நடைபெற்றது.
செய்தி – ஆஷிக்
வவுனியா
வவுனியா, கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (10) ஆரம்பமாகிய குறித்த
பேரணி அங்கிருந்து பசார் வீதி வழியாக வந்து பழைய பேருந்து நிலையப் பகுதியில்
முடிவடைந்தது.
சர்வதேசமும் அனைத்துலகமும் ஈழத்தமிழரை கைவிட்ட நிலையில் மனிதர்களாக எம்மை
பார்ப்பதில்லை
எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. நமக்கு சர்வதேச நீதிவருமா? என்ற கோள்வியோடு
இந்த தினத்தில் நாம் போராடி வருகிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
செய்தி – திலீபன்
மட்டக்களப்பு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில்
இன்று (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி
சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.
சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், கிழக்கு
மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல்
ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடினர்.
செய்தி – பவன்
திருகோணமலை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரனையே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
செய்தி – றொஷான்
பெண்கள் வலையமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது
ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் ‘உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்’
சஞ்சிகை வெளியீடும், பெண்களுக்கான ஒரு நாள் இலவச பஸ் சேவை ஆரம்பித்து
வைப்பும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் விழிப்புணர்வு
ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்
தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இறுதி நாள் நிகழ்வில்
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன்,
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.லலித் லீலாரட்ன பிரதேச செயலாளர்களான
வீ.வாசுதேவன், சிவப்பிரியா வில்வரத்தினம்.
இலங்கை போக்குவரத்து சபையின்
முகாமையாளர் கந்தசாமி சிறிதரன், கலந்துகொண்டு ‘உங்கள் உரிமைகளை அறிந்து
கொள்ளுங்கள்’ எனும் சஞ்சிகை வெளியிட்டு வைத்தனர்.