மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம்
பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 56பேருக்கு எதிரான வழக்கு
எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள்
திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது
அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸாரின் உதவியுடன் இந்த பெயர்ப்பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த
நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாககுறித்த பணியை
இடைநிறுத்தியதுடன் அங்கிருந்தவர்களின் விபரங்களை பொலிஸார்
சேகரித்துச் சென்றிருந்தனர்.
வழக்கு தாக்கல்
இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள்
திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி
ரி.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒத்திவைப்பு
இதன்போது இரு தரப்பினரின் வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கினை
எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில் சந்தேக நபர்களை
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்யுமாறு
பணித்துள்ளார்.
போரதீவுப்பற்றின் கண்ணன்புரம் மக்களுடன் பேசி குறித்த பகுதிகளில்
பெயர்ப்பலகையினையிடுமாறு போரதீவுப்பற்று பிரதேச செயகலத்தின் பிரதேச செயலாளர்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் மீண்டும்
பெயர்ப்பலகை நடச்சென்றபோது சமூக மட்ட அமைப்புகள் தமது எதிர்ப்பினை
பதிவுசெய்தாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.
