Home இலங்கை அரசியல் மன்னாரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மன்னாரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

0

புதிய இணைப்பு 

9 ஆவது நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கு வன்னி மாவட்டம் – மன்னார் தேர்தல் தொகுதிக்கான சகல
ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட
தெரிவத்தாட்சி அலுவலர், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து 98
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணி
நிறைவடைந்துள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும்,சுதந்திரமாகவும் நடை பெறுவதற்கு சகல
ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர், அதிரடிப்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் நிலையமான மாவட்ட செயலகம், மற்றும் வாக்களிப்பு நிலையங்களிலும் காவல்துறையினர் பணிக்கு
அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள்
பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரும் போது
காவல்துறையினர் வீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் வன்முறைகள் குறித்து எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு
கிடைக்கவில்லை. சாதாரண சட்ட மீறல்களுடன் தொடர்புடைய 28 முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றது. குறித்த முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட
ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண் தெரியாதவர்கள் விசேட ஏற்பாடுகளுக்கு
அமைய தங்களுக்கு தெரிந்த ஒருவரை அழைத்துச் சென்று வாக்களிக்க முடியும்.“ என தெரிவித்தார். 

முதலாம் இணைப்பு

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்
நாளை (21) காலை இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில், மன்னார் (Mannar) மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும்
இன்று (20) காலை ஒன்பது மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகள் 

மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார்
மாவட்டச் செயலகத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
வாக்களிப்பு நிலையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம்
எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Source: https://ibctamil.com/article/distribution-of-ballot-boxes-in-mannar-district-1726811918

NO COMMENTS

Exit mobile version