Home இலங்கை சமூகம் கடற்றொழில் வளங்களுக்கு 7,649 மில்லியன் ரூபாய் இழப்பு : அமைச்சர் அறிவிப்பு

கடற்றொழில் வளங்களுக்கு 7,649 மில்லியன் ரூபாய் இழப்பு : அமைச்சர் அறிவிப்பு

0

டித்வா சூறாவளியால் நாட்டின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 7,649 மில்லியன் ரூபாயை தாண்டியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஆரம்ப மதிப்பீடுகளில் இவ்விடயம் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் முழுமையான சேதங்களை மதிப்பிடுவதற்கு இன்னும் அவகாசம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இது குறித்து தெளிவுபடுத்தினார்.

மீன்வளத் துறைக்கு ஏற்பட்ட சேதம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூறாவளியையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் மீன்வளத் துறைக்கு ஏற்பட்ட சேதத்தின் ஆரம்ப மதிப்பீடு 7,649 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது.

இத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்காக நிவாரணம் மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதற்கான விரிவான திட்டமும் தயாராகியுள்ளது.

நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறையான மீன் வளத்துறைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விசேடமாக அலங்கார மீன், இறால், கடல்சார் மீன்பிடித்தல்கள மற்றும் கடல் அட்டை தொழில்களைப் வெகுவாக பாதித்துள்ளன.

கடல்சார் மீன்பிடி மீன்பிடித் துறைக்கு 1,799 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாடு பெரிய இயற்கை பேரழிவை எதிர்கொண்டாலும், நமது மக்களின், குறிப்பாக மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின், அசைக்க முடியாத உறுதிப்பாடு எமக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

அரசாங்கம் இழந்ததை மீட்டெடுப்பதற்கு மட்டுமல்லாமல், இந்தத் தொழிலை வலுவான மற்றும் வளமான எதிர்காலத்திற்குக் கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளது.

உயிர் இழப்பைத் தடுக்க முடிந்தது

எமது அமைச்சால் வெளியிடப்பட்ட ஆரம்ப எச்சரிக்கைகளினால், அதிக உயிர் இழப்பைத் தடுக்க முடிந்தது. இத்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்காக விரிவான மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

காப்புறுதி இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக, முழுமையாக அழிக்கப்பட்ட பல நாள் மற்றும் ஒரு நாள் வள்ளங்களுக்காக குறைந்த வட்டிக்கடன்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விரும்பும் இடத்தில் புதிதாக வள்ளத்தை கட்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த கடல்சார் வள்ளங்களுக்கான காப்புறுதி இழப்பீடு சீநோருக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக புதிய வள்ளம் வழங்கப்படும். பகுதியளவு சேதமடைந்த அனைத்து வள்ளங்களும் அதே இடத்தில் சீநோர் மூலம் புனரமைக்கப்படும்.

சேதமடைந்த 1205 கடற்றொழிலாளர்களின் வலைகளுக்காக அவர்களுக்கு 100,000 ரூபாய் வரையிலான நிதியுதவி வழங்கப்படும். சுமார் 6,000 நன்னீர் கடற்றொழிலாளர்களுக்கு 75,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

சிறு அளவிலான இறால் உற்பத்தியாளர்களுக்கு முதல் பருவத்திற்கு இலவசமாக இறால் குஞ்சுகள் வழங்கப்படும். சேதமடைந்த 699 தொட்டிகள் இரண்டு பருவங்களில் மீளக்கட்டப்படும். அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு புதிய குஞ்சுகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version