ஒவ்வொரு வருடமும் சராசரியாக 25 விசேட மருத்துவர்கள் நாட்டை விட்டு
வெளியேறுவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகள்
பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள்
சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்ஜீவ எச்சரித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான ஓர் அறிக்கையின்படி, கடந்த
ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஓராண்டில் மட்டும் 24 விசேட
மருத்துவர்கள் சுகாதார சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
நீண்ட கால உத்திகளை வகுக்க
தேசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 3,181 விசேட மருத்துவர்கள்
தேவைப்படும் நிலையில், தற்போது 2,042 பேர் மட்டுமே சேவையில் உள்ளதால்,
1,100க்கும் அதிகமான நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த அறிக்கை
உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக, மயக்க மருந்து நிபுணர்கள் (சுமார் 200), இயன்முறை மருத்துவர்
நிபுணர்கள் (150), சத்திர சிகிச்சை நிபுணர்கள் (100), மகப்பேறு மற்றும்
பெண்கள் நல மருத்துவர்கள் (100), குழந்தைகள் நல மருத்துவர்கள் (100) எனப் பல
முக்கியத் துறைகளில் இந்த இடைவெளி மிகவும் மோசமாக உள்ளது.
மேலும், 100 எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்கள் தேவைப்படும் நிலையில்
47 பேர் மட்டுமே இருப்பதும், 64 தடயவியல் மருத்துவ நிபுணர்கள் 41 பேர் மட்டுமே
இருப்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்கெனவே மருத்துவமனை நடவடிக்கைகளையும் நோயாளி பராமரிப்பையும்
பாதிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சு முதுகலை மருத்துவ நிறுவனமும், விசேட மருத்துவர்களின்
எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பயிற்சி பெறுபவர்களைத் தக்கவைத்துக்
கொள்வதற்கும் நீண்ட கால உத்திகளை வகுக்க வேண்டும் என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.
இது வெறும் பணியாளர்கள் பிரச்சினை அல்ல – இது முழு சுகாதார அமைப்புக்கே
அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
