அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவக் கப்டன் ஒருவர் கந்தானை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயை சுட பயன்படுத்திய ஏர் ரைபிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது
கந்தானை பொல் பிட்டிமூகலனை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.
நாயின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தூக்கத்தை கெடுத்த நாய்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாய், சந்தேக நபரின் வீட்டின் முன் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் உள்ள சாலையில் அடிக்கடி வந்து குரைத்ததால் தூக்கம் கூட வராது என நாய் சுட்டுக் கொல்லப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளமை தெரியவந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.