இலங்கை ரூபாவின் தளம்பல் நிலையானது, இலங்கையில் வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை பலவீனப்படுத்த கூடும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரித்துச் சென்றால் இலங்கையில் இறக்குமதி பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “2 வருடங்களுக்கு முன்னர் ஒரு டொலரின் பெறுமதி, 233 ரூபா மாத்திரம் தான். அது 400 ரூபா வரை அதிகரித்த போதிலும் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி வரையிலும் மிக குறைந்த மட்டத்தில் தான் இருந்தது.
டொலரின் பெறுமதி
தற்போது, அதன் பெறுமதி 294.33 ரூபாவாக உள்ளது. எனவே, இது அதிகரித்து செல்லக்கூடிய நிலையில் தான் உள்ளது. எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரிப்பு தொடருமானால் இலங்கைக்கு உள்ளே வருகின்ற இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.
அதேவேளை, வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு இங்கு அதிக பணம் கிடைக்கும் என்பதால் அது ஒரு வாய்ப்பாக அமையும்.
இருப்பினும், டொலரினுடைய அல்லது இலங்கை ரூபாவின் தளம்பல் நிலையானது, இலங்கையில் வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை பலவீனப்படுத்த கூடும்.
எனவே, டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதையோ அல்லது குறைவடைந்து செல்வதையோ ஒரு ஆரோக்கியமான விடயமாக பாரக்க முடியாது.
இந்நிலையில், டொலரின் ஏற்ற இறக்கங்களை ஒரு குறிப்பிட்ட வீச்சுக்குள்ளே வைத்து கொள்ள வேண்டியது மத்திய வங்கியின் கடப்பாடாக உள்ளது. இருப்பினும், மத்திய வங்கியால், அதனை நேரடியாக கையாள முடியாது.
வணிக வங்கிகளிடம் இருக்கின்ற டொலர் கையிருப்புக்களை மாற்றியமைப்பதன் ஊடாக அல்லது மேலதிகமாக இருக்கின்ற டொலர்களை உள்வாங்கி மத்திய வங்கியின் கையிருப்புக்களை அதிகரிப்பதன் ஊடாக அவர்கள் இதனை செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.