மெக்சிகோ(Mexico) மீதான 25 சதவீத வரி விதிப்பை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்புடன்(claudia sheinbaum)தொலைபேசி வாயிலாக நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் நோக்கில்
திடீரென சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
வரி விதிப்பு
சீனா மீதான இறக்குமதிக்கு 10 சதவிகிதமும், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான இறக்குமதிக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்தார்.
மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளின் சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், போதைப்பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
மெக்சிகோ மீது சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல், குற்றக்கும்பல் பிரச்சினையைக் கட்டுப்படுத்த தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்ததுடன் மேலும், மெக்சிகோவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் அமைப்புக்கள் மெக்சிகோ அரசுடன் கூட்டணி இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தொலைபேசியில் பேச்சுவார்த்தை
இந்நிலையில், 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது தொடர்பாக ட்ரம்ப் உடன் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
pic.twitter.com/DC5Mx8yCiB
— Donald J. Trump (@realDonaldTrump) February 3, 2025
அதன்படி, டிரம்ப் – மெக்சிகோ ஜனாதிபதி இடையேயான இந்த பேச்சுவார்த்தையின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப்பிடம் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உறுதி அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்(claudia sheinbaum)உறுதி அளித்துள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதோடு, சட்டவிரோத குடியேறிகளை தடுத்து நிறுத்துவது, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ட்ரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உத்தரவாதம் அளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்
இதனைத் தொடர்ந்து மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Sostuvimos una buena conversación con el presidente Trump con mucho respeto a nuestra relación y la soberanía; llegamos a una serie de acuerdos:
1.México reforzará la frontera norte con 10 mil elementos de la Guardia Nacional de forma inmediata, para evitar el tráfico de drogas…
— Claudia Sheinbaum Pardo (@Claudiashein) February 3, 2025
இந்த உத்தரவு ஒரு மாதம் நடைமுறையில் இருக்கும் என்றும் தொடர்ந்து, மெக்சிகோ ஜனாதிபதியுடன் ஒப்பந்தம் நிறைவேறும் வரையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “எங்கள் குழுக்கள் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு துறைகளிலும் செயல்படத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகள் டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பிற்கு எதிராக தங்களது கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
