Home இலங்கை சமூகம் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அஞ்ச வேண்டாம்

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அஞ்ச வேண்டாம்

0

அரசு மருத்துவமனை அமைப்பில் சிகிச்சை பெறும் போது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மயக்கம் மற்றும் வாந்தி போன்ற நிலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒண்டான்செட்ரோன் (Ondansetron) ஊசி மருந்தை செலுத்திய பின்னர் இரு நோயாளர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அதனை விளக்குவதற்காக நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை அமைப்பில் திறமையான, அனுபவமிக்க பணியாளர்கள் சேவை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இரு நோயாளர்களின் மரணத்திற்கான காரணம் இந்த மருந்தே என்பதைக் குறித்துத் தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து சுகாதார அமைச்சும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரிசபையும் இணைந்து தற்போது இரண்டு தனித்தனி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரிசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம, மருத்துவப் பொருள் வழங்கல் பிரிவு இயக்குநர் தேதுனு டயஸ், மற்றும் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனுஜ சி. வீரசிங்க ஆகியோரும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஊசி மருந்து உற்பத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு காரணமாகவே இவ்வாறான சிக்கல்கள் தோன்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த மருந்தை நாட்டில் தற்காலிகமாகப் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அந்த ஒண்டான்செட்ரோன் ஊசியை உற்பத்தி செய்த இந்தியாவின் மேன் ஃபார்மசூட்டிக்கல் நிறுவனத்தின் அனைத்து வகை ஊசி மருந்துகளையும் நாட்டின் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பயன்படுத்துவதை நிறுத்தவும் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version