இலங்கைக்குச் சுற்றுலா வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டிற்கு வந்தவுடன் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் அரசின் திட்டத்திற்கு இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த முடிவை எவ்வாறு அனைத்து தொடர்புடைய தரப்புகளினதும் ஆலோசனை இன்றி எடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம்
அத்தோடு, சுற்றுலாத்துறையை சார்ந்து வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாடகை ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் குறித்த முடிவால் பாதிக்கப்படக்கூடும் என்றும் நாமல் எச்சரித்துள்ளார்.
இலங்கையில், சர்வதேச ஓட்டுநர் உரிமம் கொண்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் உடன்படிக்கை ஏற்கனவே இருப்பதாகவும், அது அவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
முறைப்பாடுகள்
சமீபத்தில் நாடு முழுவதும் பயணம் செய்தபோது, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் குறித்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பரவலான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் என கோரிய முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இந்த நடவடிக்கை வீதி பாதுகாப்புக்கும் சுற்றுலாவை சார்ந்த தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
