முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இராணுவத்தினரை நீக்கிவிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில், பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் குழுவிற்கு மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புத் தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இராணுவ பாதுகாப்பு
இதேவேளை, அறிக்கைகளின் உண்மைகளை மறைத்து, இராணுவ பாதுகாப்பை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முற்றாக ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரும் நீக்கப்பட்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மாத்திரம்
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த முப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டு, காவல்துறை உத்தியோகத்தர்களை மாத்திரம் அதற்கென ஈடுபடுத்தவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றிலும் அறிவித்திருந்தார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் இன்று மீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.