கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா (Duminda Silva), நேற்று தொடக்கம் மீண்டும் வெலிக்கடைச்சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது தொடக்கம் கடந்த ஒரு வருட காலமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை நிர்வாகம்
இந்நிலையில் சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு இணங்க கடந்த 10ஆம் திகதி அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் கடந்த 11ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டிருந்த நிலையில், உடனடியாக தேசிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதான மருத்துவர் சிபாரிசு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.