Home முக்கியச் செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குரல் கொடுக்கும் சுமந்திரன்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பிலவின் அறிக்கைகளை தவிர்த்து, நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கைகளின் உள்ளடக்கம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவராக விசாரணைகளில் பங்கேற்றிருந்தேன். 

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையானது அந்த நேரத்தில் காணப்படுகின்ற தரவுகளை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆகவே, மேலதிக விசாரணைகள் அவசியமாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதனை விட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனத் டி சில்வா தலைமையிலான அறிக்கையும் நியாயமானதாகவே இருக்கிறது. 

உதய கம்மன்பிலவின் அறிக்கைகள்

மேலும், உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றும் உள்ளது. ஆகவே, குறித்த மூன்று விடயங்கள் சம்பந்தமாக எனக்கு எவ்விதமான முரண்பாடுகளும் தெரியவில்லை.

அவ்வாறான நிலையில் உதய கம்மன்பில குறிப்பிடுகின்ற இரண்டு அறிக்கைகளும் அவசர அவரசமாக தயாரிக்கப்பட்டுள்ளதைப் போன்றே தெரிகின்றது. ஏதோவொரு காரணத்துக்காக தயாரிக்கப்பட்டதைப் போன்றும் தென்படுகிறது.

ஆகவே குறித்த இரண்டு அறிக்கைகளையும் தவிர்த்து உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினாலே தாக்குதலின் சூத்திரதாரிகளையும் உடந்தையானவர்களையும் கண்டறிய முடியும். 

அதன் பின்னர், நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version