ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தன்னால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில(udaya gammanpila) அந்த அறிக்கைகளை வெளிப்படுத்தியதையடுத்து கருத்து வெளியிடுவதற்கு விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன பொறுப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகளும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விக்ரமசிங்க நியமித்த குழுவின் உண்மைகளை வெளிப்படுத்திய கம்மன்பில, முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தமைக்கு அபேசேகரவும் செனவிரத்னவும் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
எனினும் ஜானகி அல்விஸ் தலைமையிலான இந்தக் குழு, அபேசேகர மற்றும் செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக ரணிலால் நியிமிக்கப்பட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.