Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! மீண்டும் ராஜபக்சக்கள் மீது திரும்பும் கவனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! மீண்டும் ராஜபக்சக்கள் மீது திரும்பும் கவனம்

0

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான பொறுப்பினை ராஜபக்சர்கள் மீது சுமத்துவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். அரசியலுக்காக இந்த  குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படும் விடயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சி காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ராஜபக்சக்கள் மீது குற்றம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குண்டுத் தாக்குதல்களின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மீது பொறுப்பாக்குவதற்கு ஒருசில மத தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2018 ஆம்  ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதே  தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியது.

சனல் 4இன் ஆவணப்படம்

ஆகவே அரசியலுக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

குண்டுத்தாக்குதல்கள் குறித்து புலனாய்வு பிரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அதனை கருத்திற் கொள்ளாது தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்திய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி பொய்யான ஆவணப்படத்தை வெளியிட்டது. சனல் 4 யுத்த காலத்திலும் பொய்யான சித்தரிப்புக்களுடன் ஆவணப்படம் வெளியிட்டது.

ஆகவே இமாம் விசாரணை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அல்விஸ் அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பிலவுக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி இந்த குண்டுத்தாக்குதலை அரசியல் பிரசாரமாக்கியே ஆட்சிக்கு வந்தது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததால் கத்தோலிக்கர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே நம்பிக்கையளித்த மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version