Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உதய கம்மன்பில வெளியிடவுள்ள மற்றுமொரு அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உதய கம்மன்பில வெளியிடவுள்ள மற்றுமொரு அறிக்கை

0

இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் (S I Imam) அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர் 

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி.அல்விஸின் (A.N.J. De Alwis) அறிக்கையை உதய கம்மன்பில கடந்த 21ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara), தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான ரவி செனவிரத்ன (Ravi Seneviratne), குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஷானி அபேசேகர (Shani Abeysekara) ஆகியோர் மீது அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் இலங்கையின் அரசியல் அரங்கில் அண்மையில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் பற்றி இதற்கு முன்னர் ஒரு வார்த்தை கூட பேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது இது பற்றி பேசுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version