Home இலங்கை பொருளாதாரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

இவ்வாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 – 5 சதவீதம் எனும் மட்டத்தில் பதிவாகும் என தாம் எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு 4.4 சதவீதமாக பதிவாகும் என உலக வங்கி எதிர்வுகூறியிருக்கின்ற போதிலும், அதனைவிட அதிகமாக பொருளாதார வளர்ச்சி பதிவாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட விதத்தில் அச்செயற்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனவும், அத்தகைய சில மாறுதல்களுடனேயே கடந்த வாரம் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாடு

அரசாங்கத்தினால் எதிர்வரும் ஜனவரி மாதம் வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கொள்கைகளின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாறுதல்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் பொருளாதாரத்தை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.              

NO COMMENTS

Exit mobile version